எமது வகிபாகம்?


எம்மைச் சுற்றி நாளாந்தம் எத்தனையோ நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இவை யாவற்றையும் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையோஇ கடமைப்பாடோ யாருக்குமில்லை. ஆனால் இப்பூகோளக் கிராமத்தில் நடக்கின்ற இந்த விடயங்கள் முழு மனித சமூகத்தின் அமைதியையும் ஆட்டங்காணச் செய்யக் கூடியனவாக அமையுமாயின் அதற்கெதிராகக் குரல் எழுப்ப வேண்டியது மனிதமுள்ள அனைவரினதும் கடமைப்பாடாகும். குறிப்பாக உலகத்தில் சாந்தியையும் அமைதியையும் நிலை நாட்ட வந்த தூய இஸ்லாத்தைப் பினபற்றுகின்ற முஸ்லிம்களுக்கு இது ஒரு பணியாகும். முழு மனித சமூகத்திலும் அமைதியை ஏற்படுத்தி அவர்களை நெருக்கடியானதும் அடிமைத்தனமும் நிறைந்த இந்த உலக வாழ்க்கையிலிருந்து மீட்டு சுதந்திரமானதும் விசாலமிக்கதுமான வாழ்க்கையின் பால் வழிகாட்டுவது அல்குர்ஆனையும் சுன்னாவையும் சுமந்து, நான் ஒரு முஸ்லிம் என்று மார் தட்டுகின்ற அனைவரினதும் கடமைப்பாடாகும். இத்தகைய பொறுப்பபைச் சுமந்த முஸ்லிம்கள் முழு உலகிலும் என்ன நடைபெறுகின்றன என்பதை அறிந்து கொள்வது ஒரு புறமிருக்க முஸ்லிம் சமூகத்திற்கு என்ன நடக்கிறது என்பதைக் கூட அறியாமல் இருப்பதுதான் ஆழ்ந்த கவலைக்குரிய விடயமாகும். சுமார் பதினைந்து நாட்களுக்கு முன்னால் நீதிமன்றத்தில்…. நீதிபதிகள் வைத்த கண் வாங்காமல் பார்த்திருக்க….. அன்புக்கணவனுக்கும் மூன்றே வயது நிரம்பிய பாசமிகு மகனுக்கும் முன்னால் மர்வா அல் ஷெர்பினி என்ற மூன்று மாதக் கற்பினித்தாய் தான் ஒரு முஸ்லிம் என்ற காரணத்தால் தனக்கும் தனது மார்க்கத்துக்கும் இழிவு தரும் வகையில் நடந்து கொண்ட மனிதமற்ற ஒருவனுக்கெதிராக நீதி தேடிச் சென்றதற்காய் பல தடவைகள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட மிலேச்சத்தனமான ஒரு சம்பவம் ஜேர்மனியில் இடம் பெற்றிருக்கிறது. இது தொடர்பில் பிரபல்யமான எந்தவொரு செய்தி நிறுவனமும் செய்தி வெளியிடவில்லை. இதைக் கண்டித்து எந்தவொரு இஸ்லாமிய அமைப்பும் கண்டனம் தெரிவித்ததாக இதுவரை அறியப்படவில்லை. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : “யார் முஸ்லிம்களின் விவகாரத்தில் கவனம் செலுத்தவில்லையோ அவர் அவர்களைச் சார்ந்தவர் அல்ல” இன்னுமொரு இடத்தில் “பரஸ்பரம் அன்பு செலுத்துவதிலும் கருனை காட்டுவதிலும் முஸ்லிம்கள் ஒரு உடலுக்கு ஒப்பானவர்கள். அதன் ஒரு உறுப்பு நோவினைப்பட்டால் அதற்காக எனைய உறுப்புக்களும் காய்ச்சலைக் கொண்டும் இரவில் விழித்திருப்பதைக் கொண்டும் தமது வருத்தத்தை வெ ளிப்படுத்தும்.” ஆக முஸ்லிம் சமூகத்திற்கு உள்நாட்டிலும் சரி வெளி நாடுகளிலும் சரி அநீதம் இழைக்கப்படும்போது அதில் கவனம் செலுத்த வேண்டும், அதற்கெதிராகக் குரல் கொடுத்து அவர்களின் துக்கத்திலும் போராட்டத்திலும் பங்கெடுக்க வேண்டும். அப்போதுதான் நாங்களும் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என நெஞ்சை நிமிர்த்திக் கூற முடியும் என்பதை இந்த நபி மொழிகள் சுட்டிக்காட்டுகின்றன. நாம் எங்கிருந்தாலும் சரி என்ன தொழில் புரிந்தாலும் சரி எமக்குக் கிடைக்கும் நேரத்தில் முஸ்லிம்களின் விவகாரம் குறித்துக் கவனம் செலுத்துவது இந்நாட்களின் கட்டாயத் தேவையாவுள்ளது என்பதை மனதில் வைத்துச் செயற்பட முற்படுவோம். ஹனீபா ஏ வஹாப்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment